Tuesday, August 10, 2010

வரவேற்பு

அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறது-வடகாடு கிராமம்

இவ்வூர் மக்களின் ஆணித்தனமான கூற்று...

எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்,
கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!

-அதுபோல இவ்வூர் இளைஞர்கள் கடல் கடந்து போனாலும் தன் மண்வாசனை பிறழாமல் பிரதிபலித்து மீண்டும் இவ்வூரிலே எதிரொலிக்கும் இளைய சமுதாயத்தினர்.

-தமிழ் இனத்தலைவனும்,ஏழைகளின் மனதில் நீங்கா இடம் கொண்ட எம்.ஜி.ஆர் எனும் மூன்றேழுத்து மந்திரமும் இப்பகுதி மக்களின் மனதில் நிரந்தர குடிகொண்டுள்ள முக்கிய விடயங்கள் ஆகும்.சமூகம்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்" - என்கிறது குறள்.

எவ்வித பேதமும் இன்றி விவசாயம் ஒன்றே தொழில் அதுவே வாழ்வாதாரம் என்று காலத்தின் கண்ணாடியில் தினம் தினம் செத்து பிழைக்கும் கூட்டம் இந்த விவசாயிகள் கூட்டம்.

வடகாடு கிராமம் ஒரு சிறந்த ஒற்றுமையுடன் கூடிய கிராமத்துக்கு எடுத்துகாட்டு ஆகும்.காரணம் இக்கிராமத்தில் உள்ளடங்கிய பதினெட்டு பட்டிகளும் ஒரே சமூகமான முத்தரையர் என்ற வகுப்பினுள் அம்பலகாரர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள்.ஆகையால் இப்பகுதில் எவ்விதமான இனப்பிரச்சனையும் எழுவதில்லை.2006 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி 7,894 மக்கள் வசிக்கின்றனர்.பட்டிக்கு(தெரு) தலா நூறு குடும்பம் வீதம் மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை 1,800 உள்ளது.வீட்டுக்கு ஒரு ஆண் பிள்ளை வீதம் பதினைந்து வயதுக்கு குறைவாக உள்ளனர் ஆகையால் இளைஞர்கள் பரவாக உள்ளனர்.இப்பகுதியில் மக்களிடையே தமிழ் மொழிப்பற்று சற்று மிகுதியாகவே காண முடிகிறது அது படித்தவரானாலும் சரி படிக்காதவரானாலும் சரி தமிழ்மொழி,தமிழ்இனம் என்று முன்மொழிவதை மிகுதியாகக்காண முடியும்.
முழுத்தகவல்கள் வெளிஇணைப்பு

வரலாறு

வடகாடு என்ற கிராமம் முற்றிலும் மிக குறுகிய காலத்திற்குள் உருவாக்கப்பட்ட கிராமம் ஆகும்.அது எவ்வகையில் என்றால் இப்பகுதில் எந்தவொரு கட்டிடமோ,வீடுகளோ அல்லது பழங்காலத்தை வெளிப்படுத்தும் அடையாளங்ககளோ காணப்படவில்லை.மேலும் இக்கிராமத்தின் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் வழியாகவே வரலாற்றை கொணர முடிகிறது.அந்த வகையில் என்னுடைய பார்வையில் இக்கிராமம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி இருக்கலாம்.மேலும் இப்பகுதியில் மிகுந்த தமிழ் ஆர்வலர்கள் காணப்படுவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.அதாவது ஆங்கிலேயர் காலத்தில் சிரிவர்தனபுரம் என்ற இலங்கைக்கு 1840ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்இந்தியாவிலிருந்து பல குடும்பங்களை தேயிலை தோட்டப் பணிக்காக இலங்கையில் உள்ள மலையகத்திற்கு கொண்டு சென்றனர்.அந்த விபரம் மிக கொடுமையானது ஏனென்றால் பல வாக்குறுதிகளை சொல்லி அழைத்து சென்றவர்கள் மன்னார் வளைகுடாவரையில் கப்பலில்? அழைத்து சென்றவர்களை இறக்கிவிட்டு மன்னாரிலிருந்து கண்டியிலுள்ள மலையகம் வரையில் கால் நடையாகவே சுமார் 1450 மைல் கொண்டு சென்றனர்.அப்போதுதான் நாம் ஏமாற்றப்பட்டோம் என்று புரிந்துகொண்டும் வேறு கெதியில்லாமல் அங்கேயே பல குடும்பங்கள் அழிந்தன மீதமிருந்த குடும்பங்கள் ஜெர்மனி,இங்கிலாந்து,கனடா என்று நாடு கடந்து தப்பித்தனர்.எஞ்சிய குடும்பங்களின் வாரிசுகளே இன்று இந்த கிராமத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள்.இக்குடும்பங்கள் 1940 ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் தங்களின் தாய்நாட்டில் குடியேறினர்.இப்போதும் சில பேரின் உறவுகள் இலங்கையில் உள்ளதாகவும்,இல்லை அவர்கள் கனடாவுக்கும்,பிரித்தானியாவிற்கும் இடம்பெயர்ந்து விட்டார்கள் என்றும் பேச்சு நிலவுகிறது!.நான் கூட 1984 ஆண்டு இரண்டு குடும்பங்களுக்கு(சின்னு அம்பலம்-அண்ணாமலை&சன்ஸ்,காவல்தோட்டம்,கந்தப்பாலை.கண்டி) இடையே இருந்த கடிதப் பரிமாற்ற ஆவணங்களை கண்டேன்.அவர்கள் ரத்தத்தில் விம்மும் மன குமுரல்களே இன்று போராட்டமாக வெடிக்கிறது.இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இன்று பல இளையதலைமுறையினர் எதுக்காக நாம் இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கிறோம்! ஏன் நமக்கு மனதளவில் வலிக்கிறது என்று அறியாமலே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அதாவது இவர்களின் முன்னோர்கள் இலைங்கையில் பட்ட துரதிஷ்டவசமான இன்னல்களின் கோபம்,எரிச்சல் இவையனைத்துமே ரத்தத்திலே ஊறியுள்ளது.எம்ஜிஆர்-க்கும் இப்பகுதி மக்களுக்கும் என்னவொரு ஒற்றுமை என்றால் இப்பகுதி தலைமுறையினரும் எம்ஜிஆர் எனும் தங்கத்தின் தங்கமும் கண்டி பகுதியைச்சேர்ந்தவர்கள்.இவ்வரலாறு தெரியாத சில பதருகளே இவர்களை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.அதுவும் ஒரு அரசியல் சுய லாபத்துக்காகவே அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.மற்றபடி இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் இல்லை! ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்று பின் மீண்டும் தங்களில் தாய்நாட்டுக்கு திரும்பிய வலிமைமிக்க தமிழ்நாட்டு தமிழ் இனம்.உண்மையில் இனப்பற்று மிகுதியாகக் காணப்படும் சுமார் பதினைந்து கிராமங்கள் இப்பகுதியில் உள்ளன.அவைகளில் வடகாடு,மாங்காடு,அனவயல்,ஆவணம் கைகாட்டி,கொத்தமங்கலம்,குளமங்கலம் வடக்கு மற்றும் தெற்கு,பனங்குளம்,கீரமங்கலம்,சேந்தங்குடி,மேற்பனைக்காடு, செரியலூர் மற்றும் இவ்வூர்களை சுற்றியுள்ள சிற்றூர்களும் குறிப்பிடப்படும் அளவுக்கு மிகுந்த தமிழ் ஆர்வலர்களைக் கொண்ட பகுதிகள் ஆகும்.மேலும் இப்பகுதிகள் அனைத்தும் முத்தரையர் சமூகத்தால் சூழப்பட்ட பலம் பொருந்திய பகுதிகள் ஆகும்.எனவேதான் இப்பகுதியின் சட்ட மன்ற தொகுதியான ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் பதவி கடந்த காலங்களில்(1977-2006) அனைத்து தேர்தல்களிலும் இந்த வகுப்பினரே வெற்றிபெற்றுள்ளனர். இவ்விடத்தில் ஒரு முக்கிய விடயத்தினை குறிப்பிட விரும்புகிறேன்.அதாவது கடந்த 2010 மாசி மாதம் தாயகத்தில்(தமிழ்நாடுதான்) இருந்தபோது நான் கண்ட ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் இப்பகுதியில் 2009-2010 ஆண்டு காலப்பகுதில் பிறந்த பல ஆண் பிள்ளைகளுக்கு தமிழினத்தலைவன் மேதகுரு பிரபாகரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.(இத்தகவல் எதிர்பாராத விதம் அரசு ஆவணத்தில் இருந்து எனக்கு பார்க்க வாய்ப்பு கிடைத்தது).அதே காலப்பகுதியில் இப்பகுதியின் தற்போதைய தென்பகுதியில் உள்ள ஆற்றுப் பகுதியின் கரையோரங்களில் விவசாயம் செய்து வாழ்ந்தவர்கள் சில குடும்பங்களே அவர்களே வடகாட்டான் கரைக்காரர்கள்.மற்ற வகையறாக்களான வந்திக்கார வகையறாக்கள்,தோழ& பூனைக்குட்டிபட்டி வகையறாக்கள்,சேர்வைகார வகையறாக்கள் இவ்வனைவரும் இங்கு குடியேறியவர்களே.வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் இவ்வூர் மட்டும் விதிவிலக்கா என்ன?இப்போது வந்தவர்களின் பிடியிலே இவ்வூரின் முக்கிய பொறுப்புகள் உள்ளன.

சில தேர்தல் காலங்களில்(2009) இந்த ஈழ தமிழர் இயக்கத்தை வாய் வழியே சொல்லிக்கொள்ளும் சில ஈன பிறவிகள் இயக்க உணர்வுகளை விலைக்கு விற்றுள்ளனர்.அதுவும் இதே பகுதியில் பிறந்து வளர்ந்த ஈன பிறவிகள்.
இந்த விஷயத்தை தொடர்ந்து இயக்க உணர்வாளர்கள் மத்தியில் கடும் விரிசல் ஏற்பட்டு இப்போது துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் கோலத்தை காண முடிகிறது.

உள்கட்டமைப்பு


இயற்கையின் மடியில்


உள்கட்டமைப்பு என்றவகையில் இவ்வூர் மிக நேர்த்தியான சுற்றமைப்பு கொண்டுள்ளது.இறைவனின் அருளால் நல்ல நீரோட்டம் இப்பகுதிக்கு கிடைத்த வரம்.அதுவும் சிறிது வடக்கு பகுதியில் மட்டும் நீர்மட்டம் குறைவுதான்...தெற்கு பகுதியில் நல்ல நீர்மட்டம் மற்றும் சுவையான குடிநீரும் கூட.விவசாயம் செய்ய நல்ல உள்கட்டமைப்பு கொண்ட கிராமம் இருந்தும் மின்சார பற்றாக்குறை இப்பகுதிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.மா,பலா உற்பத்திக்கு ஏற்ற மண் இப்பகுதியில் காணப்படுகிறது.

இக்கிராமத்தினை மாநில நெடுஞ்சாலை இரண்டாக பிரிக்கிறது அதாவது புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் இந்த சாலையே இக்கிராமத்தின் மையப்பகுதி.இந்த சாலைக்கு தென்புறத்தில் உள்ள மண் தன்மை மணல் கலந்த பகுதியாகும் வடக்கு பகுதி சிறிது செம்மண் கொண்ட பகுதியாகும் எனவேதான் தென்பகுதியில் உள்ள நீர் குடிப்பதற்கு சற்று சுவையாக உள்ளது.மொத்தத்தில் சுகாதாரமான வகையில் வாழ சிறந்த இடம்.

மக்களின் பிடியில் வடகாடு

மனித குலத்திர்க்கே உரிய குணம் போட்டி,பொறாமை,மன எரிச்சல் போன்ற குணங்கள் இப்பகுதி மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது.இருந்தும் சில சந்தர்ப்பங்களில் அவைகளை மூட்டைகட்டி வீட்டுக்குள் வைத்துவிட்டு ஆலய விழாக்களில் அனைவரும் ஒன்றுகூடும் சிறப்பான ஒற்றுமையை இப்பகுதியில் காணலாம்.மேலும் மொய் விருந்து என்ற ஒரு பழக்கம் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப்பகுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் மேற்குபகுதி வரையில் பரவலாக காணப்படும் நிகழ்ச்சி!
சில திரைப்படங்களில் வரும் காட்சி போல சாப்பாட்டு இலையின் கீழ் பணம் வைத்துவிட்டு செல்லுதல் போன்ற நிகழ்வு இங்கில்லை.பல லட்சங்கள் புரளுகின்றன இம்மொய்விருந்து விழாவில்.சில பத்திரிகைகள் உண்மைக்குப்புறம்பான செய்திகளை மொய்விருந்து விழாவோடு சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுகிறது.ஒருவேளை அச்செய்தி தொகுப்பாளர் இவ்விழாவின் மீது காழ்புணர்ச்சி கொண்டுள்ளாரோ என்னவோ? காரணம் இவ்விலாவானது பல எழிய குடும்பங்களை பொருளாதார அடிப்படையில் உயர்த்தியுள்ளமைக்கு பல குடும்பங்கள் எகா உள்ள நிலையில் இவ்விழாவின் மூலம் கருப்பு பணம்,ஹவாலா என கட்டுக்கதை கட்டும் தினமலர் ஏன் அந்த பண முதலைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டியதுதானே?.இந்த தினமலர் எப்போதுமே சால்ரா போடுவதிலேயே குறியாக இருக்கும்...காரணம் ஆங்கிலேயன் இந்தியாவில் காலூன்ற காரணமாயிருந்த ஆரியர்களின் கூட்டம்தானே இந்த தினமலர் கூட்டம்.

மொய்விருந்து விழாவின் பிரத்தியேக படங்கள்

மொய்விருந்து விழாவின் வரவேற்ப்பு போர்டு

விழாவினை சிறப்பிக்க வெடித்த வெடிகளின் ஒரு பகுதி!பைசா வசூல் செய்யும் இடம் உடன் விளக்க அறிவிப்பு.


இந்த மொய்விருந்து விழாவினை சிறப்பாக ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் திறம்பட செயல்படுத்தி வரும் நிறுவனம் தாயகம் மறுதோன்றி அச்சக(ம்), உரிமையாளர் திரு.தாயகம் தமிழரசன் அவர்கள்.கிராமம் வாரியாக பல கிளை அலுவலகங்களை கொண்டுள்ள இந்நிறுவனம்,இதன் தலைமை அலுவலகம் வடகாடு.அவரது விழா அழைப்பிதல் இதோ...
மொய்விருந்துக்கான தேதி மற்றும் அதன் முழு விபரம் குறிப்பிட்ட பகுதிமட்டும்...இந்த மொய் விருந்து குறித்த பல்வேறு விமர்சனங்களும் மக்களின் கருத்துக்களும்...


*இந்த மொய் விருந்து விழாவில் கிடைத்த பணத்தில் அசையா சொத்துக்களை வாங்கி பின் அதனால் அல்லல்படும் சில தரப்பினர் இவ் விழாவினை அறவே எதிர்க்கின்றனர்.

*இவ்விழாவின் மூலம் கிடைத்த தொகையினை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்யும் தரப்பினரோ இது ஒரு பேருதவியாக உள்ளது என்று சொல்கிறார்கள்.

*இப்போதுதான் பல்வேறு வங்கிகள் படிப்பிற்காக கடன் தருகின்றன.ஆனால் கடந்த காலங்களில் இந்த விழாவில் கிடைத்த பணத்தை வைத்து பட்டம் பெற்றவர்களும் உள்ளனர்.அதில் ஏராளமானோர் இப்போது நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளார்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில்(IT Field).

*நல்ல ஒற்றுமைக்கு எகா இந்த விழா அமைகிறது.சில நேரம் இதுவே மிகப்பெரிய பாதக விளைவுகளை உமிழ்கின்றது!!!!

*சில நபர்கள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்!அதற்க்கு பல்வேறு காரணங்களும், விமர்சனங்களும் இருந்தன?
*இப்பகுதியினருக்கு மொய்விருந்து MOIVIRUNTHU moi virunthu விழாவானது விடாது கருப்பு ஆகும்.

-தொகுப்பு: விடாது கருப்பு,வடகாடு

பண்பாடு

தங்களிடையே பண்பாட்டை நிலைநாட்ட மிக நேர்த்தியான சில வரைமுறைகளை இப்பகுதி முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.

அவைகளாவன....

(அ)வடகாட்டான் கரைகாரர்கள்
(ஆ)வந்திக்கார வகையறாக்கள்
(இ)தோழ&பூனைக் குட்டிபட்டி கரைகாரர்கள்
(ஈ)சேர்வைகார வகையறாக்கள்

இந்த குழுவுக்குள்ளே இப்பகுதி மக்கள் அனைவரும் உள்ளடங்குவார்கள்.அதாவது வடகாடு கிராமம் தன்னுள் பதினெட்டு பட்டிகளை கொண்டுள்ளது.

அவைகளாவன....

1.சேர்வைகாரன் பட்டி
2.சுந்தன் பட்டி
3.பருத்திக் கொல்லை
4.தோழன் பட்டி
5.பூனைக்குட்டி பட்டி
6.வடக்கு பட்டி
7.குறுந்தடிக் கொல்லை
8.பரமன் பட்டி
9.பள்ளத்து விடுதி
10.பாப்பா மனை
11.புள்ளாச்சி குடியிருப்பு
12.மாங்க்குட்டி பட்டி
13.வினாயகம் பட்டி
14.தெற்க்கு பட்டி
15.பிலா கொல்லை
16.சாத்தன் பட்டி
17.கூட்டான் கொல்லை
18.செட்டியார் தெரு

இத்தெருக்களை மேற்கண்ட நான்கு குழுவுகளுக்குள் உள்ளடங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த குழுக்களின் விபரம் பின்வருமாறு..

(ஈ)சேர்வைகார வகையறாக்கள்

சேர்வைகாரன் பட்டி இப்பட்டி மட்டும் தனித்து இக்குளுவுக்குள் உள்ளடங்கியது.காரணம் அன்றைய முன்னோர்களின் மதிப்பீட்டில் இத்தெரு மக்கள் ஆலய விழாக்காலங்களில் விசேச சம்பிரதாய சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள்.இன்றும் அம்முறையே பின்பற்றப்பட்டுவரும் நிகழ்வினை காண முடிகிறது.அதென்ன அந்த சடங்கு?அதாவது இக்கிராமத்தின் மேற்கு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது.அந்த ஆலயத்தின் திருவிழா காலத்தின் போது இவர்களது தெருவில் இருந்து ஒருவர் குதிரையின் மீது அமர்ந்து வந்து திருவிழாவுக்கான தேரின் வடம்பிடித்து தொடங்கிவைப்பார்.மேலும் மற்ற தெரு மக்களால் இப்பகுதி மக்களை சேர்வை என்று மதிப்புடன் அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
எ.கா திரு.ராமசாமி சேர்வை,முத்து சேர்வை.

இக்கிராமத்தின் திருமண முறையினை விளக்கும் பட அமைப்பு...


மேலே குறிப்பிட்ட குழுக்களான மூன்றும் ஒன்றை ஒன்று எதிர்ப்பவை(மாமன் மச்சான் முறை) ...இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சேர்வை என்ற குழு மட்டும் அனைத்து குழுக்களுடனும் திருமண முறையினை கொண்டுள்ளது.மற்ற குழுக்கள் எந்த கால கட்டத்திலும் அதனுடைய எதிர் குழுவில் மட்டுமே திருமணம் செய்ய முடியும்.ஒரே குழுக்களுள் இதுவரை ஒரு திருமணம் கூட நிகல்ததில்லை....இதுவே ஒரு சிறப்பான பண்பாட்டு கட்டமைப்பு.இதற்கு ஏதுவாக அனைத்து தெருக்களும் குழு வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது.எகா தொழ/பூனை குழுவில் உள்ள தெரு இரண்டும் அடுத்தடுத்து இருக்கும்,வந்திக்கார குழுவில் உள்ள தெருக்கலான சாத்தன்பட்டி,கூட்டான்கொல்லை,பருத்திக்கொல்லை,தெற்குபட்டி என அடுத்தடுத்து தொடந்து அமைந்திருக்கும்.

இந்த முறை திருமண நிகழ்வுகளில் மட்டுமில்லாமல் மற்ற வைபோக விஷேசங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.எகா சில குறிப்பிட்ட விஷேசங்கலான பெண்கள் சம்பந்தமான சடங்குகள்,பிறப்பு,இறப்பு போன்ற துக்க காரியங்களிலும் இதே குழுக்கள் முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.ஆகவே பக்கத்து வீட்டு சக தோழன்களுடன் அல்லது தோழிகளுடன் ஒரு சுமூகமான உறவு இருக்கும்.இதே ஒரு சில குடியிருப்புகளினுள் மட்டும் மற்ற பட்டியைச்சேர்ந்த 1 அல்லது 2 குடும்பம் இருக்கும் பட்சத்தில் ....இந்த இளவட்டங்களுக்குள் காதல் விவகாரம் தலைதூக்கும்! இந்த விவகாரத்தில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் தெரு பரமன் பாட்டியாகும்.காரணம் இப்பட்டியானது மிகப்பெரிய தெரு மற்றும் இத்தெருவில் மட்டும் இரண்டு வகையான குழுக்கள் உள்ளனர்.இந்த விவகாரத்தில் சிக்கி அதனால் அவர்கள் குடும்பம் சின்னா பின்னமான லிஸ்ட் வடகாடு போர்டலில் அதிவிரைவில் வெளிவரும்.மற்றபடி திருமணம் செய்ய முற்படும்போது முதலில் விசாரிப்பது அந்த பெண்ணோ அல்லது பையனோ எந்த குழுக்களுக்குள் உள்ளடங்குவார்கள் என்பதை உறுதி செய்த பின்னரே மேற்படி விசயங்கள் முன்னெடுக்கப்படுவது வழக்கம்.இதில் சேர்வைக்காரன் பட்டி என்ற ஒரே ஒரு தெரு மக்களுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடோ,முறைகளோ திருமண விசயங்களில் கிடையாது!.இவர்கள் மட்டும் எங்கு வேண்டுமானாலும் எந்த பட்டியில் வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம்!அதென்னவோ தெரியவில்லை ஒரு பழமொழி இவர்களுக்கு மட்டும் இப்பகுதியில் சொல்கிறார்கள்.
"அம்மன் குளத்துக்கு கரையும் இல்லை! சேர்வைக்கு முறையும் இல்லை!"

கல்வி

கல்வி என்று எடுத்துக் கொண்டால் பட்டி வாரியாக தரம் பிரிக்கலாம்.கல்வி அறிவு பெற்ற பட்டிகளின் சாரம் பரமன் பட்டி,வடக்குப் பட்டி,பாப்பா மனை,பள்ளத்துவிடுதி,சாத்தன் பட்டி.......என்று கடைசியாக சுந்தன் பட்டி என்ற தெருவில் வந்தடையும்.மொத்த கிராமத்தின் கல்வி அறிவு 60 சதவிகிதம் என்று தோராயமாக கணக்கிடலாம்.தற்போதைய நிலவரப்படி வீட்டுக்கு ஒருவராவது கல்வியறிவு பெற்றுள்ளனர்.அம்மாதிரியான குடும்பங்களில் அரசியல்வாசம் வீசும் அதுவும் எம்ஜிஆர்,காமராசர் என்றுதான் பகிரங்கமாக வீசும்.காரணம் இப்பதிவினை பதியும் நான் கூட பள்ளிக் கூடத்துக்கு போனதே மதியம் நெல்லுக் கஞ்சி வாங்கி குடிக்கத்தான்(தண்ணியும் பருக்கையுமா இருந்தால் குடிக்கத்தானே முடியும்?).அதனாலே எனக்கு கூட மூன்றேழுத்து மூச்சுதான் பிடிக்கும்.
இப்பகுதியில் கல்வி அறிவுக்கு பின் அடுத்த மைல்கல் கனிணி துறை,இன்று பலபேர் இத்துறையில் நுழைந்துள்ளனர்.கடந்த 1989 ஆண்டு முதல் கணினித் துறையில் சர்வதேச அளவிலான சான்றிதல்களைப்பெற்ற நபர்கள் இப்பகுதியில் உள்ளனர்.பல பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர்.சில பேர் சென்னையில் பணிபுரிகின்றனர்.
அனைத்து துறைகளிலும் பொறியாளர்களும்,இளநிலை,முதுநிலை பட்டதாரிகளும்,மருத்துவர்களும் குறிப்பிடப்படும் எண்ணிக்கையில் உள்ளனர்.பெண்கள் மேற்படிப்பு என்பது இப்போது மிக தீவிரமாக உள்ளது.அதுவும் ஆண்களுக்கு நிகராக பொறியியல் துறையிலும் மருத்துவத் துறையிலும்.மேலும் செவிலியர் துறைக்கு சற்று மந்த தன்மையான முன்னுரிமையே காணப்படுகிறது.எவ்வளவு படித்தாலும் தமிழுக்கு எப்போதுமே முதல் இடம் கொடுப்பதை இப்பகுதி மக்களில் தெளிவாக காண முடியும்.இப்பகுதி மக்களில் மூன்றில் ஒருபங்கு குடும்பத்தார்கள் BBC தமிழோசை செய்திச் சேவையை கடந்த 20 ஆண்டுகளாக கேட்டுவருகின்றனர்.இப்போது இணையதளத்தின் ஊடாக கேட்கின்றனர்.அந்த அளவுக்கு உலக நடப்பு தெரிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர்கள்.

தொழில்


தொழில் என்றவுடன் சட்டென மனதில் வெளிப்படுவது விவசாயம்.அத்தொழிலே உலகின் சிறந்த முதல் நிலைத்தொழில்.அந்த தொழிலே இப்பகுதியின் வாழ்வாதாரம்.அனைத்து மக்களும் விவசாயிகள்.அதாவது தற்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்களே இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.ஏனையோர் விவசாயத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி சிங்கபூர் மற்றும் அரபுநாடுகளுக்கு வேலைக்கு சென்றுவிடுகின்றனர்.காரணம் மாத சம்பளம் வாங்க வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறொன்றும் இல்லை?.மேலும் விவசாயம் செய்தால் தரக்குறைவாக நடத்தும் பட்டின மக்கள்,இப்பகுதிக்கு பணி நிமித்தமாக வரும் அதிகாரிகளின் தவறான பார்வையே இவர்களை இப்படி மாற்றியுள்ளது.மேலும் விவசாயத்தில் ஒரு பழமொழி உண்டு அதாவது
"உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது" என்பதுதான் இன்றைய நிலை!!.மத்திய மற்றும் மாநில
அரசாங்கமானது பலவழிகளில் விவசாயத்திற்கான மடைகளை திட்டமிட்டு அடைத்துவருவதும் இவைகளுக்கு முக்கிய காரணமாகும்.அதில் முக்கிய சில விடயங்களை தருகிறேன்...
விவசாயத்திற்கான பாசன வசதிக்கு மின்சார மோட்டார்களை மட்டுமே இப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.அந்த வகையான மோட்டார் அமைக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்யவேண்டியுள்ளது.அப்படி செலவு செய்தாலும் மின்சார விநியோகமானது ஆட்சியாளர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப விநியோகிக்கப்படுகிறது.இன்றைய சூழலில்(2010) நாளாந்தம் ஆறு மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைக்கிறது.அதுவும் பல நேரங்களில் தொடரில்லா மின்சாரம் (Intermediate Power Suply) சில நிமிடத்துக்கு ஒருமுறை நிகழும்.அதன் விளைவாக பல பேரின் மோட்டார்கள் பழுதடையும் சூழல் நிலவுகிறது.அதிகாரிகளுக்கோ,ஆட்சியாளர்களுக்கோ அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை? " எவன் குடி எக்கேடுகேட்டால் எனக்கென்ன" என்று கண்ணாடி அறைக்குள் இருந்துகொண்டு ஏட்டு சுரைக்காய் கதைபேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.இந்த லட்சனத்தில் இலவச மின்சாரம் தருகிறோம்! இலவச மின்சாரம் தருகிறோம்!! என்று மேடை வழியே பீத்திக் கொள்ளும் அரசுகள் எப்போதுதான் திருந்துவார்களோ என்னவோ!அவர்கள் திருந்துவார்களோ என்னவோ விவசாயிகள் திருந்திவிட்டனர்.ஆம் கடந்து 2000ஆண்டு காலப்பகுதியில் இவ்விடயங்களை நன்கு உற்றுநோக்கிய விவசாயிகள் அவர்களது வாரிசுகளை கணினித்துறைக்கு படிக்கவைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டனர்.அதன் விழைவாக தற்போது பல குடும்பங்களில் விவசாயம் செய்ய ஆளில்லாமலும்,போதிய மின்சார தேவையின்மையாலும் விவசாயம் முற்றிலும் அழிந்துகொண்டு வருகிறது.அதேநேரத்தில் அவ்விவசாய இடங்களில் பலவகையான பழ மரங்களை பயிரிட்டுள்ளனர்.அதில் குறிப்பிடப்படும் பழ வகை பலாப் பழம்.புதுக்கோட்டை பகுதியில் பழாப்பழத்திற்கு இவ்வூர் பெயர்பெற்றது.
அடுத்து அனைத்து வகையான மலர்களும் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன.
இன்றைய மின்சார மோட்டார் பயன்படுத்தும் நிலை....
மும்முனை மின்சார Starter அமைப்பு

சில விவசாயிகளின் நிலை


பல விவசாயிகளின் நிலை

நீரின்றி அமையாது இவ்வுலகு!

பலாப்பழம் மற்றும் அதன் சாகுபடி குறித்து ஒரு சிறிய கட்டுரை...

இப்படத்தில் சுமார் 50 பலாப்பழங்கள் விளைந்துள்ளன.சராசரியாக ஒரு மரம் 25 பழங்களுக்கு குறைவில்லாமல் விளைச்சளைக்கொடுக்கின்றன.ஒரு மரம் தன் மூன்றாவது வயதில் காய்ப்புக்கு வருகிறது.இவை அனைத்து மர வகைகளும் நாட்டு மரம் என்று சொல்வார்கள்.இதே அரசாங்கத்தால் கொடுக்கப்படும் மர வகைகளை விவசாயிகள் நம்பி வாங்க முன்வருவதில்லை காரணம் அதிகாரிகளின் ஏட்டுச்சுரக்காய் பேச்சுதான்...வேறென்ன காரணம்? அது என்ன வென்றால் அதிகாரிகள் சொல்வது " எங்களின் பலா கன்று எண்ணி ஒரே வருடத்தில் காய்ப்புக்கு வந்துவிடும் மேலும் வருடத்திற்கு குறைந்தது 100 பழங்களை கொடுக்கவல்லது" என்று வாய்க்கு வந்தவைகளை எல்லாம் விவசாயிகளின் காதில் போட வேண்டியது! இதை நம்பி வாங்கிய விவசாயிகள் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது! காரணம் பல உள்ளன... சில நேரம் இயற்கை ஒத்துழைப்பு அளிப்பதில்லை ...அரசாங்க பண்ணையில் சரியான வெப்பம்,சரியான தண்ணீர், சரியான ஊட்டச்சத்து போன்றவைகளை அளந்து அந்த கன்றுகளுக்கு கொடுப்பார்கள்.ஆனால் அதே பக்குவத்தை விவசாயிகள் பல மரங்களுக்கு கொடுப்பதில் பல விதமான சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது.அதனாலேயே அரசாங்க கன்றுகளின் குணாதிசயங்கள் எதுவும் விவசாயிகளுக்கு புலப்படுவதில்லை!.இதே நேரத்தில் நாட்டு மரமானது எல்லாவிதமான சீதோஷ நிலைகளையும் எதிநோக்கும் மற்றும் தாங்கும் திறனும் கொண்டுள்ளது.மேலும் ஒரு சிறப்பான பயன் என்னவென்றால் மரம் வயதாக வயதாக காய்ப்பும் மேலோங்கும் மரத்தின் விலையும் மேலோங்கும்.இதன் காரணமாக இன்று வீட்டுக்கு ஒரு பலா மரமாவது இப்பகுதியில் உள்ளது.மேலும் இப்பகுதி பலா பழத்தில் தேன்போன்ற சுவை இயற்கையாகவே இவ்வூர் மண் கொடுக்கிறதாக காதுவழிச்செய்தி! இங்கு விளையும் பழங்கள் பட்டுக்கோட்டை,பேராவூரணி மற்றும் புதுக்கோட்டையின் கடலோர மாவட்டங்களிலும் காரைக்குடி, பரமக்குடி,தேவகோட்டை போன்ற பகுதிகளுக்கு மிகுதியாக விநியோகம் செய்யப்படுவது வழக்கம் மற்ற பகுதிகளுக்கு இவ்வூர் பழங்களின் சுவை பற்றியோ அதன் தரம் பற்றியோ தெரிய வாய்ப்பில்லை!


இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பலாப் பழ மரம் .....
வடகாடு பலா மரம் Vadakadu Jackfruit Tree


VADAKADU Picture's
 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple